மஹா சிவராத்திரி அன்று சதுரகிரியில் இரவு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் – பக்தர்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்: மஹா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் இரவு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைக்கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, 18 சித்தர்கள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மேலும் சட்டநாத முனிவர், கோரக்கர் சித்தர் உள்ளிட்ட பல்வேறு சித்தர்கள் தவம் புரிந்த குகைகளும் உள்ளன. சதுரகிரி மலையில் இன்றும் சித்தர்கள் பல்வேறு வடிவங்களில் தவம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை, கோணதலவாசல், காராம்பசுதடம், சின்ன பசுக்கிடை, நாவல் ஊற்று, பச்சரிசி பாறை, யானை பாறை, பெரிய பசு கிடை உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய 8 நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மஹா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். இந்த ஆண்டு மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 18 முதல் 21- ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மஹா சிவராத்திரி அன்று இரவு நேர வழிபாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வனத்துறை, அறநிலையத்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ”கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மஹா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு வரும் 18- ம் தேதி நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் வழக்கத்தை விட அதிகமான அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் நேர கட்டுப்பாடு இன்றி, நாள் முழுவதும் பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டும். மேலும் மஹா சிவராத்திரி அன்று மலைக் கோயிலில் இரவு நேர வழிபாட்டிற்கும் அனுமதி அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.