புதுச்சேரி: சரக்குகளை கையாள வெள்ளோட்டத்துக்காக புதுச்சேரிக்கு சிறிய கார்கோ கப்பல் வந்துள்ளது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெய்னர் டெலிவரி சேவை புதுச்சேரியில் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி உப்பளத்தில் 1994-ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய துறைமுகத்தில் 2004-ம் ஆண்டு வரை சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து நடைபெற்றது. அதன்பின் சரக்குக் கப்பல்கள் வரத்து முற்றிலும் குறைந்து போனது. அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி சென்னை-புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி புதுச்சேரி துறைமுகம், சென்னைத் துறைமுகத்திற்கு துணைத் துறைமுகமாக செயல்பட போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு துறைமுகத்தின் வடிகால் மற்றும் கால்வாய் வழிகளில் தூர்வாருதல் மற்றும் தடுப்புச்சுவர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக கப்பல், வெள்ளோட்டத்திற்காக புதுச்சேரி உப்பளம் துறைமுகம் வந்தடைந்தது.
இதுபற்றி அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடியால் வெளிநாடுகளில் இருந்து வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் புதுவை துறைமுகத்தில் கண்டெய்னர்களை டெலிவரி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னை, எண்ணுார் துறைமுகத்திலிருந்து 12 டன் எடை கொண்ட 100 கண்டெய்னர்களை கடல் வழியாக நாள்தோறும் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு கொண்டு வந்து இறக்கி டெலிவரி செய்து, இங்கிருந்து கண்டெய்னர்களை ஏற்றி செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக உப்பளம் துறைமுக முகத்துவாரம் துார்வாரப்பட்டு 4 குடோன்கள் கஸ்டம்ஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து வரும் கன்டெய்னர்கள் குடோன்களில் வைக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படும். இந்த கப்பல் கன்டெய்னர் டெலிவரி சேவை வரும் 15ம் தேதி தொடங்கும்” என தெரிவித்தனர்.