அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிசாமிக்கு சொந்தமான மூன்று கடைகளுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குறித்து, கே சி பழனிசாமி அவ்வப்போது தனது கருத்துகளையும் தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
முன்னாள் எம்பி கே சி பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கே சி பழனிசாமிக்கு சொந்தமான கோவை சேரன் டவர் பகுதியில் அமைந்துள்ள மூன்று கடைகளுக்கு, இன்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக கடைகளில் நோட்டிஸ் ஒட்டி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கே சி பழனிசாமி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளாமல் தங்கள் பணியை முடித்துவிட்டு சென்றனர்.