ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டு சுவர் சரிந்து விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர், பாத்திமா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பழைய வீடு உள்ளது. இதை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் நேற்று வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நெற்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சேகரும் ஈடுபட்டுள்ளார். வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடித்தபோது, எதிர்பாராதவிதமாக சுவர் முழுவதும் சரிந்து சேகர் மீது விழுந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பலத்த காயமடைந்த சேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.