யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? RSS டூ ஆளுநர்… பாஜக வளர அச்சாரம் போட்ட தளபதி!

சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இன்று காலை வெளியாகியுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் 1957 அக்டோபர் 20ல் பிறந்தவர். இந்துத்துவா சித்தாந்தத்தின் மீதான ஈர்ப்பால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். 16 வயதில் இருந்தே ஜனசங்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியவர்.

பல்வேறு பொறுப்புகள்

அதன்பிறகு பாஜக தொடங்கப்பட்ட போது அக்கட்சியில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். வணிகக் குழு உறுப்பினர், பகுதி மேம்பாட்டு திட்டத்தின் நாடாளுமன்ற குழு உறுப்பினர், நிதி அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர், இந்திய கயிறு வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 1990 முதல் 1995 வரை, 2001 முதல் 2006 வரை என இரண்டு முறை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்திருக்கிறார்.

கூட்டணி வியூகம்

1999ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது
திமுக
– பாஜக கூட்டணி ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்த தேர்தலுக்குள் கூட்டணி உடைந்தது. இதையடுத்து 2004 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக – பாஜக கூட்டணி அமைய சி.பி.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்காற்றினார். 1998ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பிற்கு பின்னர் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

தேர்தல் களம்

1998, 1999, 2004, 2014, 2019 என ஐந்து முறை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதில் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று மூன்று முறை தோல்வியை தழுவினார். இதில் 2014 தேர்தலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இன்றி பாஜக தனித்து களமிறங்கியது. அப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகள் பெற்று ஆச்சரியப்படுத்தினார்.

கைதும், நட்புறவும்

2012ல் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கொல்லப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைகளை கொண்டிருந்தாலும், பிற கட்சி தலைவர்கள் உடன் நட்புறவுடன் திகழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

வெற்றி தளபதி

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. அப்போது நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் சி.பி.ராதாகிருஷ்ணன்,
மு.க.ஸ்டாலின்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், கலைஞருக்கு பின்னர் யார் என வருகின்ற போது தளபதி அவர்கள் தளபதியாக மட்டுமல்லாமல் எங்களை எல்லாம் வீழ்த்திய ”வெற்றி தளபதி” எனப் புகழாரம் சூட்டினார்.

ஆளுநர் பதவி

ஆனால் பாஜகவை பொறுத்தவரை சி.பி.ராதாகிருஷ்ணன் தான் தளபதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம், பாஜக என 50 ஆண்டுகள் தொடர்ந்து பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இவரது தீவிர உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக பாஜகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.