புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு பிப்ரவரி 15ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லோக்சபா செயலகம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி காந்திக்கு எழுதிய கடிதத்தில், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி ஆகியோரின் உரிமை மீறல் நோட்டீஸ் மீதான தனது பதிலை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் மக்களவைக்கு அளிக்குமாறு மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செவ்வாயன்று லோக்சபாவில் ‘குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ மீதான ராகுல் காந்தியின் உரையைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க் – அதானி விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்த நிலையில், துபே மற்றும் ஜோஷி ஆகிய இரு எம்பிக்களும் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பாஜக தலைவர்கள் இருவரும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அளித்த நோட்டீஸ்களில் காந்தியின் கருத்துகள் அடிப்படையற்றவை என்றும், அவர் “அவமதிப்பு, பாராளுமன்றத்திற்கு விரோதமான மற்றும் மரியாதைக்குறைவான” குற்றச்சாட்டுகளை கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். காந்தி கூறிய பல கருத்துக்கள் சபாநாயகரால் நீக்கப்பட்டன.
அதானி உடனான உறவு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றும், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ராகுல் காந்தி, தனது நாடாளுமன்ற உரையின் போது அவர் பல விதமான விமர்சனங்களை முன் வைத்தார். பிரதமர் மோடி, தனது நண்பர் அதானியை பாதுகாக்கிறார் எனவும் குற்றம் சாட்டிய நிலையில், அவர் பல விதமான சர்ச்சைக்குரிய் அகருத்துக்களைக் கூறியதாக பாஜக எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.