ராமநாதபுரம், காட்டு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மகன் பக்கா என்ற பிரபுதேவா (28). இவர்மீது ராமநாதபுரத்திலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபுதேவா இறந்துகிடந்திருக்கிறார்.

பிரபுதேவாவின் தாய் நேற்று முன்தினம் இரவு அவர் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு திறந்து கிடந்திருக்கிறது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, கதறி அழுதிருக்கிறார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் பஜார் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அங்கு வந்த போலீஸார் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த பிரபுதேவாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த வீட்டில் கொலையாளிகள் குறித்த தடயங்களை போலீஸார் சேகரித்தனர்.

மேலும், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பிரபுதேவா கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.