வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு தார்ச்சாலை அவசியம்: கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பூசணியூத்து, முதுத்தூத்து, தேக்கிளைகுடிசை திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமம் உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு விளையும் பயிர்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், ஒவ்வொரு நாளும் பயிர்களை மாட்டுவண்டிகள், டூவீலர்கள் மற்றும் தலைச்சுமையாக விவசாயிகள் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூலி ஆட்களின் செலவு அதிகமாகிறது.

மேலும் தார்சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் வருசநாடு, கீழபூசணியூத்து, சிங்கராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கு தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வரும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து கிராமவாசி பாலு கூறுகையில், எங்கள் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி நீண்ட காலமாக இல்லாமல் உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.