மும்பை பரேல் பொய்வாடா பகுதியில் வசிப்பவர் சுசிதா (58). அவர் அங்கிருக்கும் ஆராதானா என்ற கட்டடத்தில் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று மாலை வீட்டில் சுசிதா தனியாக இருந்திருக்கிறார். அவர் கணவர் வெளியில் சென்றிருந்தார். அந்த நேரம் இரண்டு பேர் ஜியோ வைஃபை ஊழியர்கள் என்று கூறிக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். ஏற்கெனவே அந்தப் பெண்ணின் வீட்டில் ஜியோ இண்டர்நெட் இருந்தது. அது சரியாக வேலை செய்யாமல் இருந்தது. அதனால், அதனை சரிபார்க்கும்படி கூறி இரண்டு பேரையும் அந்தப் பெண் வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டுக்குள் நுழைந்ததும், அவர்கள் அந்தப் பெண்ணை பிடித்துக்கொண்டு துணியால் அவர் வாயை மூடினர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கசெயினை பறித்துக்கொண்டனர். வீட்டு பிரோ சாவி எங்கிருக்கிறது என்று கேட்டனர்.

ஆனால் அந்தப் பெண் சாவி இருக்கும் இடத்தைச் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார். இதையடுத்து கோபமடைந்த இரண்டு பேரும் சமையல் அறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, மிரட்டி சாவியைக் கேட்டனர். அப்படியிருந்தும் அந்தப் பெண் சாவியைக் கொடுக்கவில்லை. இதனால் அந்தப் பெண்ணை பலமுறை வயிற்றில் சரமாரியாகக் குத்தினர். அதனைத் தொடர்ந்து கையில் கிடைத்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். கத்திக் குத்தில் காயமடைந்த அந்தப் பெண், தன் கணவருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுசிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் விஜய் பேசுகையில், “நாங்கள் இருக்கும் கட்டடத்தின் முதல் மாடியில் ஒருசிலர் மட்டுமே வசிக்கின்றனர். வழக்கமாக நான் மாலை நேரத்தில் என்னுடைய நண்பர்களைச் சந்திக்க செல்வது வழக்கம். இதனை யாரோ தொடர்ச்சியாக கவனித்து, நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். என் மனைவிக்கு கத்திக் குத்து ஆழமாக இல்லை. இதனால் உயிர் தப்பிவிட்டார்” என்று தெரிவித்தார்.