ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே 2ம் கட்ட அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அகழாய்வுப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம், நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களில் புதிதாக அகழாய்வு பணி நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டில் அறிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சிமேட்டில் 35 ஆண்டுக்கு முன் தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில், நுண்கற்கால கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் ஆகியவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் முதற்கட்ட அகழாய்வு பணிகளுக்காக கடந்தாண்டு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 16ம் தேதி தொழில் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அகழாய்வுப்பணி தொடங்கியது. அ்ங்கு 15 குழிகளில், நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. அகழாய்வில் சுடுமண்ணாலான சங்கக்கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரம் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு கடந்த செப்.30ம் தேதி நிறைவு பெற்று பொருட்கள் யாவும் காலப்பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உச்சிமேட்டில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான இடத்தை அகழாய்வு பணி இயக்குநர் தேர்வு செய்தார். தற்போது வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் உள்ள உச்சிமேட்டில், 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணி இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.