வாஷிங்டன் : அலாஸ்காவில், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருள், ஏவுகணை வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீனாவைச் சேர்ந்த பலுான் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பலுான், உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட பலுானின் பாகங்களை ஒப்படைக்கவும் மறுத்தது.
ஆனால், இந்த பலுான் தட்ப வெப்பநிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா கூறியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் அலாஸ்காவில், 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் ஒன்று பறப்பது நேற்று முன்தினம் தெரிய வந்தது. இதையடுத்து இந்த மர்ம பொருள், விமானப் படை போர் விமானத்தின் ஏவுகணை வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் கூறியுள்ளதாவது:
இந்த மர்ம பொருள், ஒரு சிறிய காரின் அளவுக்கு இருந்தது. இது என்ன மாதிரியான பொருள் என்பது தெரியவில்லை. உளவு பார்ப்பதற்காக வந்ததா என்பதும் தெரியவில்லை.
இந்த மர்ம பொருள், நாட்டின் வான் வழி பயணத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அதை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதன்படி, போர் விமானத்தின் ஏவுகணை வாயிலாக அந்தப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
கீழே விழுந்துள்ள அதன் பாகங்களை மீட்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. அதன்பிறகே அது என்ன பொருள் என்பது தெரிய வரும்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement