புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்திவரும் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். ஆனால், வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்பு, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலரையும் நேரில் சந்தித்தும், அலுவலகம் வரவழைத்தும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், தனிப்படை போலீஸார் போன்றே சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல், பட்டியல் சமூகத்தினரையே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி துன்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் வேங்கைவயல் கிராமத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்தவர்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நம்மிடம் பேசுகையில்,“எங்க பிள்ளைகளை, விசாரணைங்கிற பேர்ல ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போய், நடந்த இந்தத் தவறை நாங்களே செஞ்சதா ஒப்புக்கொள்ளச் சொல்லி தனிப்படை போலீஸார் மிரட்டினாங்க… செய்யாத தவறை நாங்க செஞ்சதா எப்படி ஒப்புத்துக்க முடியும்?
எல்லாருமே எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாத்தணும்’னு ஒத்தைக் கால்ல நின்னோம்.

சி.பி.சி.ஐ.டி போலீஸாலவாச்சும் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கணும்னு நனைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, சி.பி.சி.ஐ.டி விசாரணையும் அதைவிட மோசமாக இருக்கு. தனிப்படை போலீஸ் மாதிரியே, குற்றத்தை நாங்க செஞ்சதுபோலவே, ஒப்புக்கொள்ளச் சொல்றாங்க. முதல்ல தனிப்படை போலீஸ், இப்போ சி.பி.சி.ஐ.டி போலீஸ்னு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காம, எங்களையே பலிகடா ஆக்கப் பாக்குறாங்க. மாவட்ட நிர்வாகம் இது தொடர்பா உரிய நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.