வாஷிங்டன், அமெரிக்க வான் பகுதியில் பறந்த மற்றொரு மர்மப் பொருள் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது, கடந்த ௧௦ நாட்களில் நடந்துள்ள நான்காவது சம்பவமாகும்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா அருகே, ௭௦ ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன பலுான், கடந்த ௪ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதை, சீனா உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், ௧௦ம் தேதி, அலாஸ்கா வான் பகுதியில் பறந்த மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதற்கடுத்த நாள், அமெரிக்காவில் இருந்து கனடா வான் எல்லைக்குள் நுழைந்த மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மிச்சிகன் மாகாணத்தில், ௨௦ ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மப் பொருளை, அமெரிக்க ராணுவம், போர் விமானம் வாயிலாக ஏவுகணையை செலுத்தி சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக, அமெரிக்க வான் வெளியில் பறந்த மர்மப் பொருள்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; கடந்த ௧௦ நாட்களில் நடந்துள்ள நான்காவது சம்பவமாகும்.
முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலுான் சீனாவைச் சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கடந்த மூன்று நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட பொருள் என்ன என்பதும், அது எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், அமெரிக்க அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
சீனா புகார்
இந்த சம்பவம் தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் நேற்று கூறியதாவது:கடந்த ௨௦௨௨ ஜனவரியில் இருந்து, ௧௦ முறை அமெரிக்க உளவு பலுான்கள் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளன. எவ்வித அனுமதியும் பெறாமல், மற்ற நாடுகளின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது தான் அமெரிக்காவின் வழக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.இதை, அமெரிக்க திட்டவட்டமாக மறுத்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement