ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இமாலய வெற்றி வேண்டும் என்று திமுக தலைமை எதிர்பார்க்கிறது. ஒன்றரை ஆண்டு கால தனது ஆட்சியின் சாதனை, அதிமுகவின் உட்கட்சி மோதல் ஆகியவை காரணமாக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அமையும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதிமுக தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் அவர் களமிறங்குவது உறுதியான பின்னர் திமுக தரப்பில் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிகம்?ஏற்கெனவே நன்கு அறிமுகமான வேட்பாளர் அதிமுக பக்கம் நிற்கிறார். திமுக கூட்டணி சார்பில் நிற்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நன்கு மீடியா அறிமுகம் இருக்கிறதே தவிர தொகுதி மக்களிடத்தில் அதிமுக வேட்பாளருக்கு தான் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள் தொகுதிவாசிகள். முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம், உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோரின் பிரச்சாரம் ஆகியவை திமுகவுக்கு வலு சேர்க்கும் என்றாலும் மேலும் சில காய் நகர்த்தல்களும் நடைபெறுகின்றன.
ஈரோடு கிழக்கு – எந்த சமூகம் பெரும்பான்மை?இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. “தேர்தல் என்பது மக்கள் ஆற்றும் ஜனநாயக் கடமை என்றாலும், இங்கே அடித்தளத்தில் பணமும், சாதியும் முக்கிய பங்காற்றுகின்றன. தொகுதியில் பெருவாரியான வாக்குகளைக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே போட்டியிட கட்சிகள் வாய்ப்பு வழங்கும். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை 35 சதவீதம் முதலியார் சமூகம் இருப்பதாக சொல்கிறார்கள்.
கவுண்டர் சமூக வாக்குகளை குறிவைக்கும் அதிமுக!அடுத்த இடத்தில் கவுண்டர் சமூக வாக்குகள் உள்ளன. சிறுபான்மையினர், உள்ளிட்ட பிற சமூக வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே அந்த சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டை மையமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் முதலியார் சமூக வாக்குகளை சிதறாமல் பெற வேண்டும் என திமுக திட்டமிடுகிறது.
முதலியார் சமூக வாக்குகளை பெற முயற்சி!அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் முதலியார் சமூகத்தவர்கள் முக்கிய பதவிகளை அலங்கரித்துள்ளனர். எனவே அந்த சமூகத்தவர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று திமுக எதிர்பார்க்கலாம். ஆனால் தங்கள் சமூகத்தவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற வருத்தம் செங்குந்த முதலியார் சங்க நிர்வாகிகளுக்கு எழுந்ததாம். இதை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவசர அவசரமாக தனது மருமகன் சபரீசனை ஈரோடு அனுப்பியுள்ளார்.
முதல்வரின் தளபதியா சபரீசன்?சபரீசன் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள தங்கம் மஹாலில் செங்குந்த முதலியார் சங்க நிர்வாகிகள், அனைத்து தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் திமுகவினர், அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை. ‘முதல்வரிடம் என்னென்ன கோரிக்கைகள் வைக்க விரும்புகிறீர்களோ அதை என்னிடம் கூறுங்கள், அதை அவரது பார்வைக்கு கொண்டு சென்று உடனடி தீர்வு காணப்படும்’ என்று கூறியுள்ளார். வந்திருந்தவர்களும் சில கோரிக்கைகளை சபரீசனிடம் கூறியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் தங்கள் பலம் மேலும் கூடும் என திமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.