தேர்தல் ஆணையம் சரியான முறையாக நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபின், செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “செல்லும் இடமெல்லாம் எங்கள் வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி.
அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களும் கொண்டு வரப்பட்ட்டது. ஆனால், கடந்த 21 மாதகால திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் பணத்தை நம்பி களமிறங்கியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என பல பிரச்சினைகளால் மக்கள் பெரும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக, நீட் ரத்து, கல்விக்கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை என எதையும் செய்யவில்லை.
மக்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தி உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க. செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் மட்டும் சரியான நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார்” என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.