அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களுக்கு மத்தியில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றிய மோடி, அதை மட்டும் தவிர்த்துவிட்டு முழுக்க காங்கிரஸையும், எதிர்க்கட்சிகளையுமே சாடினார்.

அதில் முக்கியமாகப் பேசுபொருளான ஒன்றுதான், “முன்பிருந்த காங்கிரஸ் அரசு, அரசியலமைப்புப் பிரிவு 356-ஐ தவறாகப் பயன்படுத்தி, 90 முறை மாநில அரசுகளைக் கலைத்தது. அதில் இந்திரா காந்தி மட்டுமே 50 முறை மாநில ஆட்சிகளைக் கலைத்திருக்கிறார். இன்று அத்தகைய காங்கிரஸுடன் எதிர்க்கட்சிகள் நிற்கின்றன” என்ற மோடியின் பேச்சு.
எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், கேள்விகேட்டவர்களின் மீதே இத்தகைய விமர்சனத்தை முன்வைத்த மோடியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து விகடன் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், “மாநில கட்சிகளுக்கு அதிக பிரச்னை கொடுத்த மத்திய ஆட்சி எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `காங்கிரஸ்’, `பா.ஜ.க’, `கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகபட்சமாக 68 சதவிகிதம் பேர் அதிக பிரச்னை கொடுத்த மத்திய ஆட்சி `பா.ஜ.க’ எனத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், 29 சதவிகிதம் பேர் `காங்கிரஸ்’ என்றும், 3 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.