மும்பை, மஹாராஷ்டிராவில் காதலர் தின பரிசு தருவதாகக் கூறி, பெண் ஒருவரிடம் 3.68 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் 51 வயது பெண் வசித்து வருகிறார். திருமணமான இவர், சமூக வலைதளம் வாயிலாக அலெக்ஸ் லாரன்சோ என்பவருடன் பழகி வந்தார்.
காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த பெண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து பரிசு அனுப்பியதாக கூறிய அலெக்ஸ், இதை 31 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ‘கூரியர்’ நிறுவனத்தில் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின், அந்த நிறுவனத்தில் இருந்து பேசியவர்கள், ‘பார்சல்’ அனுமதிக்கப்பட்ட அளவை விட பெரிதாக இருப்பதால், கூடுதலாக 72 ஆயிரம் ரூபாய் செலுத்த வலியுறுத்தினர்.
சில மணிநேரம் கழித்து மீண்டும் பேசிய கூரியர் நபர்கள், ‘பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதால் பணப் பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டை தவிர்க்க, மேலும் 2.65 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்’ என்றனர்.
இவை அனைத்தையும் செலுத்திய நிலையில், மேலும் 98 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு கூரியர் நிறுவனம் கூறியது. இதனால் சந்தேகமடைந்த பெண், இது குறித்து அலெக்சிடம் கேட்டார்.
‘மீதி பணத்தை தராவிட்டால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என அலெக்ஸ் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சமூக வலைதளம் வாயிலாக போலியான பெயரில் தொடர்பு கொண்டு, பெண்ணை ஏமாற்றி 3.68 லட்சம் ரூபாய் பறித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement