ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் மெட்ரோ குடிநீர் குழாய் பதிக்கும்போது, 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (23). இவர், முகலிவாக்கம் சபரி நகரில் தங்கி மணப்பாக்கம் அன்னை சத்யா நகரில் ஒப்பந்த அடிப்படையில், மெட்ரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றும் 10 அடி பள்ளத்தில் வேலை பார்த்துவிட்டு, பணி முடிந்து மேலே ஏறும்போது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அருளை, சக ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அருள் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து மருத்துவமனை சார்பில், நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.