சப்பாத்தி மாவு பேக்கெட்டில் கஞ்சா கடத்திய கணவன் – மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறை!

சப்பாத்தி மாவு என்ற போர்வையில் கஞ்சா கடத்திய கணவன் – மனைவிக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  திருவள்ளுர் மாவட்டம், எளாவூர் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கம்பத்தை சேர்ந்த அய்யார் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் கோதுமை மாவு பெயர் பொறிக்கப்பட்ட பைகளில் 50 கிராம் பாக்கெட்டுகளாக 20 கிலோ கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, கஞ்சா கடத்திய கணவன் மனைவி இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நீதிபதி தன் தீர்ப்பில், சமூக நோயாக உள்ள போதைப் பொருள் பழக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கச் செய்வதுடன்,  எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணம், பெரும்பாலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, போதைப் பொருட்கள் நோய்வாய்ப்பட்ட சமூகத்தையும், தீங்கு விளைவிக்கும் கலாச்சாரத்தையும் உருவாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களால் இளம் பருவத்தினர் மற்றும்  மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விகிதம்  சமீபத்திய ஆண்டுகளில் ஆபத்தான நிலைக்கு அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.