வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பே சொத்து கணக்கு தாக்கல் செய்த ஊராட்சி வேட்பாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்-செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் கிராமம் அமைந்துள்ளது. மிகப் பழமையான இக்கிராமத்தில் 3 ஆறுகளும் சங்கமிக்கும் திருமுக்கூடலும், லட்சுமி நரசிம்மர் கோயிலும், 5 பெருமாள் ஒருசேர அருள்பாலிக்கும் பாலாற்று பார்வேட்டையும் நம் கண்முன்பு தோன்றும்.
இது, வரலாற்று புராதனங்களின் சாட்சியாகவும், தமிழர்களுடைய சிறந்த ஊராட்சி நிர்வாகத்தின் ஆதிகால சாசனமாகவும், வரலாற்றின் பதிவுகளாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், பழையசீவரம் கிராமத்தின் பாலாற்றை ஒட்டிய மலைக்குன்றின் முகப்பில் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு பொங்கல் விழாவின்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வந்து அருள்பாலிப்பது வழக்கம். இக்கோயிலில் கி.பி 9ம் நூற்றாண்டில் தமிழகத்தின் மிகச் சிறந்த ஊராட்சி நிர்வாக முறை செயல்பாடுகள் குறித்து கல்வெட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
தற்காலத்தில் ஊராட்சி பெருந்தலைவர் என குறிப்பதைப் போல், கடந்த 1100 ஆண்டுகளுக்கு முன் மரியாதை நிமித்தமாக பெருமக்கள் என வாரிய பொறுப்பாளரை குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊர் வாரிய நிர்வாக பதவிக்கு போட்டியிடுபவர்கள், தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெருமக்களாக பதவி ஏற்பவர் கணக்கை எழுதத் துவங்கும்போதும் கணக்கை ஒப்படைக்கும் போதும் சத்தியம் செய்தல் வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அக்காலத்தில் ஒருமுறை தேர்வு செய்யப்படுபவர், மீண்டும் ஒருமுறை போட்டியிட முடியாது.
இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். இவர்கள் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்துள்ளனர். ஏரி வாரியம், சம் வத்சர (ஆண்டு வாரியம்) என இரண்டு வாரியங்கள் செயல்பட்டு வந்தது. ஆண்டுதோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெருமக்கள் கணக்கு காட்ட வேண்டும். வாரியப் பணிகளை செய்யாமல் இருத்தல் கூடாது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. வாரிய பெருமக்களுக்கு 2 கழஞ்சு பொன், அதாவது 10 கிராம் ஊதியமாக வழங்கி வந்ததும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் தெரிவித்தார்.