ஆதியமன், கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ௩௫ ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், துருக்கியின் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ௬ம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல வலுவான நிலநடுக்கங்களும், நுாற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதில் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் தென் பகுதி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரமாகியுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருவது, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதற்கு மேல் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
வீடிழந்த மக்கள், தெருக்களில் கடும் குளிரில், பனிப்பொழிவுக்கு இடையே, உணவுக்காகவும், குடிநீருக்காகவும் போராடி வருகின்றனர்.
இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு, மீண்டும் கட்டடங்கள் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே, துருக்கியின் தெற்கே உள்ள போலட் என்ற கிராமத்தில், அனைத்து வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து, பொருட்களை மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement