நேற்று அசாம்… இன்று சிக்கிம் : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்!!

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து, 34,000 மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, துருக்கியை தொடர்ந்து, அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானை மையமாக கொண்டு பலமான நிலநடுக்கம் தாக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், அசாமின் நாகோன் மாவட்டத்தில் நேற்று மாலை 4.15 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால், உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கி.மீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே நிலநடுக்கம் குறித்து ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய நிலநடுக்கவியல் இயக்குநர் ஓ.பி.மிஸ்ரா கூறியிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்த வரையில் நிலநடுக்க பாதிப்புள்ள பகுதியில் அமைந்திருந்தாலும் நிலைமைகள் வேறுவிதமாக உள்ளன. பாகிஸ்தான் உடனான  எல்லைக்கு அருகில் இந்தியாவின் மேற்கு பகுதியில் 3 புவித்தட்டுகளின் சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் சிறிய அளவிலான நிலஅதிர்வுகள் தினமும் ஏற்பட்டு வருவது நமது அதிர்ஷ்டம். 4 மற்றும் 5 ரிக்டர் அளவிலான சிறிய நில அதிர்வுகளால் பூமியின் அழுத்தம் வெளியேறுகிறது. இதுவே பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.