“பிரபாகரன்… அவர் தப்பிச் செல்லும் கோழை அல்ல” – சீமான் விவரிப்பு

ஈரோடு: “போர் முடிந்து, ஒரு பேரழிவை சந்தித்துவிட்ட பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பிரபாகரன் தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் பகிர்ந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள்தான் இருக்கின்றன. அதை உங்களிடம் கேட்கிறேன். என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

எந்தச் சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று கூறி வீரமாக நின்று சண்டை செய்தவர் எங்கள் அண்ணன். தன்னுயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச் செல்கின்ற கோழை என்று நீங்கள் நினைக்கிறீர்களா எங்கள் அண்ணனை?

போர் முடிந்து, ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்துவிட்டப்பிறகு, 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கியிருந்து, பத்திரமாக இருந்துகொண்டு எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இரண்டாவது சொல்லிவிட்டு வருபவர் அல்ல அவர். வந்துவிட்டு சொல்பவர். அதுதான் அவருக்கு பழக்கம். அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள் சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அவர்.

எனவே, தேவையற்று குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சரி அவரே சொல்கிறார்… மக்களுக்கு முன் ஒருநாள் தோன்றுவார் என்று. அப்படி தோன்றுபோது பேசுவோம். ஐயா பழ.நெடுமாறன் கூறுவதுபோல் ஒருநாள் எங்கள் தலைவர் நேரில் வந்துவிட்டால், வந்ததில் இருந்து பேசுவோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், “தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார்” என்று அவர் கூறியிருந்தார். இந்தத் தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.