விடுதலை புலகளின் தலைவர் பிரபாகரன், இறுதிக்கட்ட போரில் மரணமடையவில்லை என்றும் அவர் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் தஞ்சாவூரில் இன்று கூறியது, தமிழ்நாடு மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகரன் மட்டுமின்றி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தாக கூறப்படும் பல்வேறு போராளிகளின் நிலை குறித்து இன்றும் கேள்விகள் உள்ள நிலையில், பழ. நெடுமாறனின் பேச்சு அரசியல் தளத்தில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
பழநெடுமாறினின் கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்து தங்களிடம் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பதிலளித்துள்ளது. அந்த வகையில், பிரபாகரன் உயிருடன் இருந்தபோது, இணக்கமாக இருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பழ. நெடுமாறனின் கூற்றுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் கூறியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை பயணத்தில் இருக்கும் அவர், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கூறிய அவர்,” விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை அவர். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க மாட்டார்.
அவர் சொல்லிட்டு வருபவர் அல்ல வந்துட்டு சொல்பவர். அதனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், மக்களுக்கு முன் தோன்றுவார் என்றால் வந்ததற்கு பிறகு பேசுவோம். பழ.நெடுமாறனோடு தந்தை – மகன் உறவு உள்ளது. என்னிடம் அவர் இதுகுறித்து பேசியதில்லை. ஊடகத்தின் வாயிலாகவே நானும் தெரிந்து கொண்டேன். இதை விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல், கடந்து செல்ல வேண்டும்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு வருவது ஜனநாயக அத்துமீறல். அவர்களுக்கே அசிங்கம் என்றுபட்டதால் பிப்ரவரி 14ஆம் தேதியில் Cow Hug Day-வை திரும்ப பெற்றுள்ளனர். பசுவை தொட்டால் புனிதம், மனிதன் தொட்டால் தீட்டு என்கிற கூட்டமாக உள்ளது. அவர்களுக்கு கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை.
தற்போது கொள்ளையில் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல்கள் இறங்கி உள்ளனர். அவர்களை வட மாநிலத்தவர் என்று சொல்லாமல் இந்திக்காரர்கள் என்று கூற வேண்டும். நேற்று வீட்டை உடைத்தார்கள், பிறகு வங்கி ஏடிஎம்மை உடைத்துள்ளனர்” என்றார்.