தமிழ்நாட்டில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், “தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்” என்று கூறியிருந்தார்.
ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக மறுத்து, பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக, பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், பிரபாகரன் குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள், பழ.நெடுமாறனின் செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்று அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், “தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது” என்று வைகோ கூறியிருக்கிறார்.