ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், `விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருக்கிறாரே, அது உண்மையான தகவலாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. என் தம்பி (பிரபாகரனின் மகன்) பாலச்சந்திரனை சாகவிட்டு, பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா… `எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டைவிட்டு போகமாட்டேன்’ என வீரமாக சண்டையிட்டவர் பிரபாகரன்.

தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகும் கோழை என பிரபாகரனை நினைக்கிறீர்களா… போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்தப் பிறகு 15 ஆண்டுகளாக ஓரிடத்தில் பத்திரமாக தங்கியிருப்பார் என்று கருதுகிறீர்களா… அல்லது இதுவரை எதுவும் பேசாமல் இருந்திருப்பாரா… பிரபாகரன் சொல்லிவிட்டு வருபவர் அல்ல. வந்துவிட்டுச் சொல்வார். அதுதான் அவர் பழக்கம். சொல்லுக்கு முன்பு செயல் எனக் கற்பித்தவர். தேவையற்று குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு நாள் மக்கள் முன்பு தோன்றுவார் என அவர்களே சொல்கின்றனர். தோன்றும்போது அதைப்பற்றி பேசுவோம்.
கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என பெரியாரிடம் கேட்டபோது, `அதிலிருந்து இருப்பதாகச் சொல்லி விடுவேன்’ என்று பதிலளித்தார். அதுபோல, பிரபாகரன் நேரில் வந்துவிட்டால், வந்தது முதல் பேசுவோம்.
பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்து நெடுமாறன் என்னிடம் எதுவும் பேசினாரா என்று கேட்கிறீர்கள். அது குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. மாவீரர் தியாக தினத்தன்று பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பேசுமாறு லண்டனிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர். அது குறித்து அவரையே (பழ.நெடுமாறன்) பேசச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டேன். எனவே அதனை விவாதத்துக்கு எடுக்காமல் கடந்து செல்வதே நல்லது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “தி.மு.க-வினரிடம் பணம் உள்ளது. அதனால், இடைத்தேர்தலில் புழக்கத்தில் விடுகின்றனர். தற்போது வங்கியில் கொள்ளை அடிக்கும் வடமாநிலத்தவர், பின்பு நாட்டையே கொள்ளையடிப்பார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. திருமகன் ஈ.வெ.ரா, நாம் தமிழர் கட்சியில் இணைய விரும்பியது குறித்து அவர் நண்பர் ஸ்ரீராம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரும்பாததால், அவர் இணையவில்லை. நான் ஏன் இப்படிக் கூறினேன் என்று தெரியவில்லை என்று இளங்கோவன் கூறியிருக்கிறார். உண்மை நிலை என்ன என்று அவருக்கே தெரியும். தற்போது அதை அவர் மறுத்து கூறுவது எப்படி இருக்கிறது என்றால், கருணாநிதி குறித்தும், இடைத்தேர்தல் குறித்தும் முன்பு அவர் கூறிய கருத்துகளை இப்போது மாற்றி பேசுகிறார் அல்லவா. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போல், என்னால் மாற்றி, மாற்றி பேச முடியாது.

ஈரோடு கிழக்கில் அனைத்து அமைச்சர்களும், முன்னாள் முதல்வராக இருந்தவரும் பிரசாரம் மேற்கொள்வது ஜனநாயக அத்துமீறல். இடைத்தேர்தலையொட்டி இரவோடு இரவாக சாலைகள் போடப்படுகின்றன. இதைப் பார்க்கும்போது, நாடெங்கும் அடிக்கடி இடைத்தேர்தல் நடந்தால் நல்லது என்று தோன்றுகிறது. அப்படி நடந்தால் சாலைகள் அனைத்தும் சீராகும். உளவியலாக தொண்டர்களைத் தயார் செய்ய அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போவதாகக் கட்சிகள் கூறுகின்றன. தி.மு.க அதிகாரத்தில் இருக்கும்போது, தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி, கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைத்தே தீருவோம் என்றால், நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது நாங்கள் உடைத்தே தீருவோம். ஏற்கெனவே சிவாஜி, கண்ணகியின் சிலைகள் அகற்றப்படவில்லையா… இங்கு விளைந்த நெல்லை சேமிக்க ஒரு கிடங்கு அமைக்க முடியவில்லை, தெருவில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது. டாஸ்மாக் சரக்கை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கிறீர்கள். முரசொலி அறக்கட்டளையில் உள்ள பணத்தை எடுத்து நினைவுச்சின்னம் வையுங்கள். அதையும் கடலுக்குள் வைக்கக் கூடாது. வைக்கவும் விடமாட்டோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் உண்மையான உழைப்புதான் தேர்தலில் வெற்றி பெறும்” என்றார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.