பெரியபாளையம்: பெரியபாளையத்தில் பிரதான சாலையான சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும் வாகன நெரிசலால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை தவிர்க்க, அங்கு புறவழி சாலை அமைக்க சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 14 வார விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும், பெரியபாளையம் வழியே சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் நெடுஞ்சாலையும் உள்ளது.
இதனால் இவ்வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், பெரியபாளையம் பகுதியில் உள்ள 4 சாலை சந்திப்பு முதல் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் ஏராளமான மக்கள் வந்து குவிந்தனர்.
இந்த வாகனங்கள் அனைத்தும் குறுகலான நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படுவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து சரிசெய்ய போதிய போலீசாரும் பணியில் இல்லை. மேலும், கோயிலின் பின்புறம் வாகனங்களை நிறுத்த, சாலையில் நின்றபடி வாகன வரி வசூலிக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம் முதல் 82 பனப்பாக்கம் வரையில் நீண்ட தூரத்துக்கு வரிசையாக வாகனங்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இதனால் அங்கு போக்குவரத்தை சீரமைக்க அங்கு பணியில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான போலீசாருக்கும் சவாலாக அமைந்தது. இதில் பக்தர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். எனவே, பெரியபாளையம் பகுதியில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி மிக விரைவில் புறவழி சாலை அமைத்து தருவதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர்.