தமிழகம் முழுவதும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மோசடி கும்பல்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த வகையில், `பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி, சினிமாவில் வருவதைப்போல, ஒரு பெரிய மோசடி சம்பவம் திருவள்ளூரில் நடந்திருக்கிறது. அண்மையில், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வசந்தகுமார் என்பவர், வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. திருவள்ளூரை அடுத்திருக்கும் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். தனியார்ப் பள்ளியில் வேலை பார்த்துவந்த இவருக்கு, கொரோனா காலகட்டத்தில் வேலை பறிபோனது. இதனையடுத்து, பூந்தமல்லியிலுள்ள ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் மோகன் என்பவரின் அறிமுகம் வசந்தகுமாருக்குக் கிடைத்தது. மோகன், வசந்தகுமாரிடம் பணம் வாங்கிக்கொண்டு, வருவாய் பேரிடர் நிர்வாகத்தில் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக பணி ஆணை வழங்கியிருக்கிறார்.
அதையடுத்து, வசந்தகுமார் தனக்குத் தெரிந்தவர்களிடம், `பணம் கொடுத்து, எனக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. நீங்களும் பணம் கொடுத்தால் உங்களுக்கும் அரசு வேலை கிடைக்கும்’ என்று கூறியிருக்கிறார். அதனை நம்பிய சிலர், அவரிடம் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் பெயரில் போலியான கையெழுத்துப் போடப்பட்ட பணி நியமன ஆணை, அரசு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மோசடி கும்பல் காக்களூர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து போலியான அரசு அலுவலகம் ஒன்றை நடத்திவந்திருக்கிறது.
திருவள்ளூர் சுற்றுலா மாளிகை ஊழியர் ஸ்டாலின், பூந்தமல்லியிலுள்ள ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் மோகன், நகராட்சிப் பணியாளர் வட்சலா ஆகிய மூவருடன் வசந்தகுமார் கூட்டுச் சேர்ந்து, இந்த மோசடியைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 51 பேரிடம் வேலை தருவதாகச் சொல்லிக் கிட்டத்தட்ட 1.4 கோடி ரூபாய் வசூல் செய்து செய்திருக்கிறது இந்தக் கும்பல். பணியிலிருந்தவர்களுக்கு கொரோனா கள ஆய்வு, குளம் அளவீடு செய்தல், திருவள்ளூர் சுற்றுலா மாளிகையில் பணி போன்ற வேலைகளையும் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, பணியிலிருந்தவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக குறைந்தபட்ச சம்பளமும் வழங்கப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மேஜையைப் போட்டு வட்சலா போலியாக நியமித்த ஊழியர்களிடம் வருகை பதிவேட்டில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் செயல்பட்டிருக்கிறது இந்தக் கும்பல். ஒருகட்டத்தில், இந்தக் கும்பல் கொடுத்தப் பணி நியமன ஆணையில் ஒருவரின் பெயர் தவறாக இருக்க, அது குறித்து விசாரித்தபோது இந்தக் கும்பலின் மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக இது குறித்து திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், வசந்தகுமாரைக் கைதுசெய்திருக்கின்றனர். இவர்கள் போலியாக நடத்திய அரசு அலுவலகத்திலிருந்து மடிக்கணினி, போலி அரசு அடையாள அட்டைகள், போலி பணி நியமன ஆணைகள் என பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், போலீஸார் தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதோடு, இந்த மோசடியில், அரசு அதிகாரிகள் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.