டெல்லி: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பானதுதான் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற ஆதாரை இணைக்கும் படி வற்புறுத்த கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் எம்எல் ரவி என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசின் நல திட்டங்கள் உரிய நபருக்கு கிடைக்கிறதா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு நல்லது தான் என்றும் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர்.