விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

தஞ்சை: தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று அளித்த பேட்டி:  சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்கு உள்ள தொடர்பு மூலமாக அவர் நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் எங்கு உள்ளார், எப்போது வருவார் என்பது விரைவில் தெரியவரும். இதுவரை அவரை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க உள்ளார். தமிழீழ மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவளிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிர்ப்பு தளமாக அதை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்திய பெருங்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணி பார்த்து அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு பிராபகரனுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கவிஞர் காசி ஆனந்தன் உடனிருந்தார்.  அருகில் இருந்தவர்களுக்கு பழ.நெடுமாறன் இனிப்புகளை வழங்கினார். தஞ்சையில் பழ.நெடுமாறனை மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் இன்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.