புதுடெல்லி: அதானி விவகாரத்தில் நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பிரபல தொழில் அதிபர் அதானி குழும பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளன. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி அதில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்து இருப்பதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு செயற்கையாக இழப்பீடு நடந்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, பர்திவாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது ஒன்றிய அரசு மற்றும் செபி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார். அவர் கூறுகையில்,’ ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமப் பங்குகள் சரிந்துள்ளதால் பங்குச் சந்தைக்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்த நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முன்மொழிவினை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது. இந்த குழுவை அமைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்கள், விசாரணை நடத்தும் முறை பற்றிய அனைத்து விவரங்களையும் ரகசிய ஆவணமாக தாக்கல் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இங்குள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு ஒரு குழுவின் கண்காணிப்பு தேவை . ஏனெனில் தற்செயலான எந்த செய்தியும் இதே போல் நாட்டிற்குள் பணப் புழக்கத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை இதுதொடர்பான குறிப்புகளை நீதிமன்றத்தில் வழங்கலாம் என்று தெரிவித்து விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை தள்ளிவைத்தனர்.