மும்பை: நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் (Rake) காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட PJT1040201 எண் கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை கொண்ட ரயிலை காணவில்லை. பிப்ரவரி 1ம் தேதி கிளம்பிய ரயில் 4ல் இருந்து 5 நாட்களில் சென்று இருக்க வேண்டும், ஆனால் 12 நாட்கள் ஆகியும் அதிகாரிகளால் ரயில் எங்கு இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாரங்களின்படி பிப்ரவரி 1ம் தேதி அன்று நாக்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் கடைசியாக கசரா நிலையத்திற்கு அருகிலுள்ள ஓம்பர்மலி ரயில் நிலையத்திற்கு (நாசிக் மற்றும் கல்யாண் இடையே) வந்திருக்கிறது. ஆனால் அதன் பின்னர் ரயிலின் இருப்பிடம் தற்போது வரை தெரியவில்லை. ரேக்குகளின் நேரடி இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பான இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்க தகவல் அமைப்பிலும் (FOIS Freight Operations Information System) காணாமல் போனது பற்றி துப்பும் இல்லை, தகவலும் இல்லை. இந்த ரயிலில் ஏற்றுமதிக்கு தரமான அரிசி, பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனம் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.