திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளபில் 1.45 லட்சம் ஹெக்டேரில் ஆழ்துளை கிணறு, ஏரிப் பாசனம் மற்றும் மானாவாரி விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் பயிருக்கு அடுத்தபடியாக எண்ணெய் நிலக்கடலை, எள், சோயா பயிரிடப்படுகின்றன. திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருத்தணி, திருவாலங்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் நிலக் கடலை மட்டும் 5500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பயிரில் இருமுறை களைகள் பறித்து, உரமிட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்சி பராமரித்தால் போதுமானது. இதற்கு பராமரிப்பு செலவு குறைவு மற்றும் மகசூலும் அதிகம் கிடைக்கும் என்பதால் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு விளைநிலங்களில் சதுரபாத்தி அமைத்து நிலக்கடலை பயிரிட்டு வந்தனர்.
இதனால் நெருக்கமாக செடிகள் வளர்வதால், களை எடுக்கவும், வேர் முடிச்சுகள் தரையில் பதியாமல் இருப்பதால் சாகுபடி குறைவாகவே கிடைக்கும். அதேபோல் பாத்தி அமைக்க மற்றும் களை எடுக்கவும் போதுமான விவசாய தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில் விளைநிலத்தை ஆழமாக உழவு செய்து ஆழச்சால் அகலப்பாத்தி கரை அமைத்து நிலக்கடலை பயிரிடுவதை விவசாயிகள் விரும்புகின்றனர். இந்த முறையில் இயந்திரம் மூலம் விதைத்தல், களை எடுத்தல் போன்றவைகளை செடிகளுக்கு சேதாரமின்றி மேற்கொள்ளலாம். அத்துடன் களை எடுத்தல், செடிகளுக்கு தேவையான நீர்பாய்ச்சுதல் போன்ற பணியும் எளிதாகும். இதனால் அழச்சால் அகலப்பாத்தி கரை அமைத்து நிலக்கடலை சாகுபடி செய்வதை விவசாயிகள் விரும்புகின்றனர்.
எல்லப்பநாயுடு பேட்டை கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் எல்.சுரேஷ் நிலக்கடலை விளைநிலத்தில் நேரடியாக விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். அப்போது, இந்த முறையில் நிலக்கடலை பயிரிடுவதால் பராமரிப்பு செலவு குறைவாகும். ஆழச்சால் அகலப்பாத்தி கரை அமைத்தல், விதைகள் விதைத்தல், களை எடுத்தல், அறுவடை போன்ற பணிகளை இயந்திரம் மூலம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் விதைக்கும் போது விதைகள் வீனாவது குறையும். தேவையான அளவு உரம், நீர் பாய்ச்சவும் முடியும். கரைகளில் செடிகள், வேர் முடிச்சுகள் ஆழமாக இறங்குவதால் கடலைக்காய் பிடிப்பும் அதிகமாக இருக்கும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் அதிக மகசூல் கிடைக்கும். எனவே இதுபோன்ற முறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறவும் வேண்டும். இவ்வாறு அதிகாரி எல்.சுரேஷ் கூறினார்.