கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் – மாதர்பாக்கம் சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. குமரநாயக்கன்பேட்டை, நாகராஜ் கண்டிகை, எஸ்.ஆர்.கண்டிகை, காரம்பேடு, மேல்பாக்கம், சூரப்பூண்டி, சாணபுத்தூர், அளிப்புக்குளம், கொண்டமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சில வருடங்களாக தலைமை ஆசிரியர் கே.சீனிவாசலு மேற்பார்வையில், இந்தப் பள்ளியில் மாணவர்கள் அதிகரிப்பின் காரணமாக கடந்த 2005ம் ஆண்டு 21 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது கூடுதல் அறிவியல் ஆய்வகமும் கட்டப்பட்டது.
அவ்வாறு கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் கடந்த 18 வருடங்களாக காட்சி பொருளாகவே வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாணவர்களும் இன்னாள் மாணவர்களும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சேதம் அடைந்த நிலையில் அறிவியல் ஆய்வகத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் சீனிவாசனிடம் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுநாள்வரை பள்ளி கல்வித்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ‘’இது போன்ற பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பது பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன’ என்று தெரிவிக்கின்றனர். புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தும் கழிவறையும் பராமரிப்பில்லாமல் உள்ளது. எனவே அறிவியல் ஆய்வகம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.