
கலை இயக்குனர் ஆர் ராதா காலமானார்
எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆர் ராதா(88) காலமானார். சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று(பிப்., 14) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர் .

முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய், அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமல்ஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்சூரியன், நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், போன்ற 75க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக இவர் பணியாற்றியிருக்கிறார்.