காதலர் தின சம்பவம்… காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் குண்டுவீச்சு – இளைஞர்கள் கைது!

மதுரை மாநகர் அனுப்பானடி வடிவேலன் தெரு பகுதியில் உள்ள சரவணக்குமார் என்பவர் மண்பானை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்தாண்டு முன்பாக அதே பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும்  மணிரத்னம் என்ற இளைஞர், சரவணக்குமாரின் வீட்டில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாணவி அதனை மறுத்துவிட்டு தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால் சரவணக்குமார், மணிரத்னத்தின் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிரத்னத்தை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக அவர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

அதன் பின்னரும் மாணவியை பின் தொடர்ந்து, காதலிப்பதாக தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி தொடர்ச்சியாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிரத்னம் தனது நண்பருடன் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டை சரவணக்குமாரின் வீட்டில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். பெட்ரோல் குண்டுவீச்சால் சரவணக்குமாரின் வீட்டின் சுவரில் மட்டும் சேதம் ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அப்போது அங்கு யாரும் இல்லாத நிலையில் வேறு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. 

மேலும் சரவணக்குமாரின் வீட்டின் முன்பாக சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் நல்வாய்ப்பாக சிறுவர்கள் மீதும் எந்தவித காயமின்றியும் தப்பினர். நெருக்கமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற்றது, அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காதலர் தினம் என்பதால் தன்னுடன் வர வேண்டும் எனவும், தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவியிடம் இளைஞர் மணிரத்னம், நேற்று தொடர்ந்து தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு மாணவி பதிலளிக்காமல் சென்றதன் காரணமாக இன்று மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்து ஓடியதாக காவல்துறை விசாரணையில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக மதுரை அனுப்பானடி பகுதியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. குண்டுவீச்சில் ஈடுபட்ட மணிரத்னம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்  சரவணக்குமார் என்பவரது  வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களான மணிரத்னம், பார்த்தசாரதி ஆகிய இருவரையும் தெப்பக்குளம் காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள திலிப், அஜய் ஆகிய இருவரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.