கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது குடிசையில் இருந்த தாய், மகள் தீக்குளித்து பலியான சம்பவத்தில் இன்ஸ்பெக்டர், உதவி கலெக்டர் உட்பட 39 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூர் திகாத் பகுதிக்குட்பட்ட மடவுலி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண கோபால் தீட்சித் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நேற்று அங்கு சென்ற மாவட்ட துணைஆட்சியர் தியானேஷ்வர் பிரசாத் தலைமையில், வருவாய் மற்றும் காவல்துறையினர் கோபால் தீட்சித் ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசையை புல்டோசர் கொண்டு அப்புறப்படுத்த முயன்றபோது குடிசைக்குள் இருந்த கோபாலின் மனைவி பிரமீளா தீட்சித்(48), அவரது மகள் நேகா(23) இருவரும் தீக்குளித்து விடுவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து புல்டோசரை வைத்து குடிசை அப்புறப்படுத்தப்பட்டபோது குடிசை வீட்டுக்குள் இருந்த பிரமீளா தீட்சித்தும், நேகாவும் தீக்குளித்து பலியானார்கள்.
இந்நிலையில், இதுகுறித்த புகாரின் அடிப்படையில், துணை ஆட்சியர் தியானேஷ்வர் பிரசாத், 4 வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் கவுதம், மற்றும் போலீசார் உட்பட 39 பேர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஞானேஷ்வர் பிரசாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.