லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்று முன்தினம் இரவு 22 சக்கரங்கள் கொண்ட கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், லாரியின் முன்பகுதியில் சிக்கியுள்ளது. இது தெரியாமலேயே அந்தக் காரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி இழுத்துச் சென்றுள்ளது.
காரிலிருந்த 4 பேர் வெளியே குதித்து உயிர் தப்பினர். 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் இழுத்து செல்லப்பட்ட நிலையில், லாரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக பார்த்தாபூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் லாரி டிரைவர் மது குடித்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.