குறையாத பிளாஸ்டிக் பை பயன்பாடு… மக்களின் மஞ்சப்பை நிராகரிப்புக்கு என்னதான் காரணம்?

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை  பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

image
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 05.01.2023 முதல் 02.02.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 20,123 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5,409 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,498.81 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19,26,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
image
இதுகுறித்து சென்னையை சேர்ந்த பூபதி என்பவர் ‘புதிய தலைமுறை’க்கு அளித்த பேட்டியில், “வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் அவசரத்தில் பொருட்களை வாங்கி வருகிறோம். அப்போது பிளாஸ்டிக் கவரில் தான் காய்கறி உள்ளிட்டவைகளை தருகிறார்கள். மஞ்சப்பையின் விலையும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அதே போல் சென்னையை சேர்ந்த மேரி என்பவர் அளித்த பேட்டியில், “அதிக இடங்களில் பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்காவிட்டாலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஓரங்களில் காய்கறிகளை கூறு போட்டு பிளாஸ்டிக் கவரில் வைத்து தான் விற்பனை செய்கிறார்கள். கூடுதலாக சில இடங்களில் மஞ்சப்பை விற்பனை வழங்கும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்” என்றார்.

இதுகுறித்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் போது, “பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஞ்சப்பை எந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.