நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஊராட்சிகள், இருக்கூர், வீரணம்பாளையம், நடந்தை. இந்த மூன்று ஊராட்சிகளிலும் 15 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவுள்ள இடங்களில் வசிக்கும் விவசாயிகளையும், பொதுமக்களையும் தான் சிறுத்தை ஒன்று அச்சமடைய வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த மாதம் 31-ம் தேதி செஞ்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவரது பசுமாட்டுக்கன்றை மர்ம விலங்கு இரவில் வேட்டையாட, ‘வெறிநாய் பார்த்த வேலை இது’ என்று மக்கள் முதலில் நினைத்தனர்.

ஆனால், தொடர்ந்து விவசாயிகளின் ஆட்டுக்குட்டிகள், மாட்டுக்கன்றுகள், வளர்ப்பு நாய் என்று 7 விவசாயிகள் வளர்த்த கால்நடைகள், வீட்டுவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், இந்த விசயம் மக்களை அச்சுறுத்தும் விவகாரமாக மாறியுள்ளது. அதன்பிறகு, வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி பேசும் விவசாயிகள் சிலர்,
“வனத்துறையினர் வந்து பார்த்துட்டு, ‘வெறிநாய் இன்னொரு நாயைக் கொல்லாது. இது சிறுத்தைதான். இரவில்தான் அது வேட்டையாடும். அதனால், இரவில் வெளியில் வரவேண்டாம்’ என்று தெரிவித்ததால், நாங்க அதிர்ச்சியானோம். சிறுத்தைக்கு பயந்துகிட்டு நாங்க பகல்லேயே வெளியே போகலை. இதற்கிடையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் போட்டாங்க.

தொடர்ந்து, சிறுத்தையால் அதிகம் பாதிக்கப்பட்ட இருக்கூர் ஊராட்சியில் உள்ள செஞ்சுடையாம்பாளையத்தில் இரண்டு, நடந்தையில் ஒன்று என்று மூன்று இடங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். அதேபோல், ஒன்பது இடங்களில் கேமராக்கள் வைத்துள்ளனர். அதேபோல், எங்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வல்லுனர்களும், முதுமலை பகுதியில் இருந்து ட்ராக்கர்ஸ் எனப்படும் புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வல்லுனர்களும், நேற்று இருக்கூர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதோடு, தேனி, கம்பம் பகுதிகளைச் சேர்ந்த 40 -க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் இங்கு வந்து தங்கி, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கருதப்படும் இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம் பகுதிகளில் சுமார் பல கிலோ மீட்டர் சுற்றளவில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அதோடு, இரவு நேரத்தில், ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் குழுவினரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இவர்களுடன், சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவ வல்லுநர்கள் இருவரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதியில் அவர்கள் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டதில், செஞ்சுடையாம்பாளையம் பகுதியை அடுத்துள்ள புலிகரடு மற்றும் அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள ஐந்துக்கும் மேற்பட்ட குவாரி மண்திட்டு பகுதியில், புதர் மண்டி கிடக்கும் இடங்களில் சிறுத்தை பதுங்கி இருக்க கூடும் என சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், செஞ்சுடையாம்பாளையம் பகுதியில், கடந்த 5 ம் தேதி வனத்துறையினரால் வைக்கப்பட்ட கேமராவில், சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது.
அதேபோல், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், மின் கம்பங்களும், உயர் அழுத்த மின் வயர்களும் செல்வதால், இரவு நேரத்தில் ட்ரோன் கேமராவை பறக்க விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னொருபக்கம், 15 நாட்களுக்கு மேலாக நாங்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வயலில் விவசாயம் பார்க்கமுடியவில்லை. நாங்கள் வளர்க்கும் கால்நடைகளை எப்படி பாதுகாப்பது என்பதும் புரியவில்லை.

அதிக வெளிச்சம் இருந்தால், சிறுத்தை அந்தப் பகுதிக்கு வராது என்று வன உயிரடுக்கு அலுவலர்கள் சொல்லியிருப்பதால், ஒவ்வொரு விவசாயியும் வீடுகளைச் சுற்றி ஐந்தாறு லைட்டுகளை கட்டி, பளிச்சுனு எரிய விடுகிறோம். கால்நடைகளையும், வளர்ப்பு பிராணியையையும் அடித்துச் சாப்பிடும் சிறுத்தை, எங்களைச் சாப்புடுறத்துக்குள்ள பிடிக்கணும்” என்று கோரிக்கை வைத்து முடித்தனர்.