ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கியதை திரும்பப் பெறக் கோரி அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் தொடர் போராட்டத்தை தொடங்குகின்றனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின் மாநில தலைவர்கே.செந்தில் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து,சங்கத்தின் தலைவர் கே.செந்தில், செயலாளர் என்.ரவிசங்கர் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
அரசு மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி செலவில் சம்பளம் வழங்கும் அரசாணை 293-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கியதை திரும்பப் பெற்று, காலை 9 மணி முதல் மாலை4 மணி வரை பணி நேரத்தை அமல்படுத்த வேண்டும். பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களை கேலி செய்து, நோயாளிகளின் உறவினர்களை வைத்துக் கொண்டே, மருத்துவர்கள் மீது குற்றம் இருப்பதைப் போல் பேசுவதைக் கண்டிக்கிறோம்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் சராசரியாக 20 சதவீதம் பேர்தான் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவ காப்பீட்டை மட்டுமே முன்னிறுத்தி மாநில அளவில் ஆய்வு செய்து, மருத்துவர்களுக்கு குறியீடுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறுகுறியீடுகள் பெறாத மருத்துவர்களுக்கு பணியிடமாற்றம் போன்ற தண்டனை வழங்கப்படும் என அச்சுறுத்துவது தவறானது.
உலக சுகாதார நிறுவனத்தில் குடும்ப நல குறியீடுகளுக்குக் கூட ‘டார்கெட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி பின்பற்றப்படுகிறது. ஆனால், டாக்டர்களுக்கு இன்சூரன்ஸ் டார்கெட் வைத்து, அதன் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப். 14) முதல்வரும் 26-ம் தேதி வரை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. பின்னர்,மாவட்ட தலைமை அல்லது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மார்ச் 1 முதல் 7-ம் தேதிக்குள் தர்ணா நடைபெறும். அதற்குபிறகும், எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், மார்ச் 15-ல்அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவைத்தவிர்த்து, மற்ற மருத்துவர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறுஅவர்கள் கூறினர்.