ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, கடலூர் மாவட்டம், அண்ணாகிராமமேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் N.T.கந்தன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
N.T.கந்தன் மறைவுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “கடலூர் வடக்கு மாவட்டம், அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினரும், மாவட்ட திட்டக் குழு முன்னாள் உறுப்பினருமான N.T. கந்தன் அவர்கள், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் கந்தன் அவர்கள் கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றி வந்தவர்.
பாசமிகு மகனை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், நல்லூர்பாளையம் கிளைக் கழகச் செயலாளருமான திரு. V. தங்கராசு மற்றும் திரு. கந்தன் அவர்களுடைய மனைவி திருமதி பிருந்தா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அந்த இரங்கல் செய்திக்குறிப்பில் எடப்பாடி K.பழனிசாமி தெரிவித்துள்ளார்.