திருமங்கலம்: திருமங்கலம் – மதுரை இடையே புதிய இரட்டை ரயில்பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலிருந்து திருமங்கலம் நகர் வரையில் இரட்டை ரயில்பாதை பணிகள் நிறைவடைந்து விட்டன. திருமங்கலத்திலிருந்து மதுரை ரயில்வே ஜங்ஷன் வரையிலான 17.32 கி.மீ தூரத்திற்கான இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி புதிய இரட்டை ரயில்பாதையில் அதிவேக ரயிலை இயக்கி சோதனை செய்வது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். முதற்கட்டமாக மதுரையிலிருந்து திருமங்கலம் வரையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலமாக புதிய ரயில்வே தண்டவாளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு ஆய்வு ரயில் திருமங்கலத்திலிருந்து மதுரைக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது.
நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டது. நான்கு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் அதிவேகமாக கிளம்பி மதுரை நோக்கி சென்றது. ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவுறுத்தி இருந்ததால் பொதுமக்கள் யாரும் தண்டவாளம் அருகே வராமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 120 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இருபுறமும் தூசி பறக்க ரயில் மின்னல் வேகத்தில் சென்றது. ரயிலின் வேகத்தில் தண்டவாளத்தின் உறுதி தன்மையை கணக்கிட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த சிறப்பு ரயிலில் ரயில்வே உயர்அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அமர்ந்து சென்று ஆய்வு நடத்தினர்.