தேசிய குடல் புழு நீக்க வாரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் குடற்குழு நீக்க மாத்திரைகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத்திரைகள் வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? இதனால் என்ன பலன்? இக்கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
குடற்புழுக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. அங்கு அவை தினமும் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. `நெகேட்டர் அமெரிக்கானஸ் (Necator americanus)’ என்பது தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் ஒரு குடற்புழுக்களின் வகை. இவை ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 0.2 மில்லி வரை குடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சும். அவை உடலுக்குள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும்போது நம் உடலில் `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகை ஏற்படுகிறது.
எனவே தான் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் குடற்புழுக்கள் நீக்கம் செய்வதற்காக `அல்பெண்டசோல் (Albendazole)’ என்ற மாத்திரையை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இடைநின்ற மாணவர்கள், குழந்தைகள் காப்பகங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசின் சார்பில் இலவசமாக கொடுக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
இது குறித்து கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் சுரேகா நம்மிடையே பேசியபோது, “உடலில் ரத்த சோகை ஏற்படுவதற்கு இத்தகைய குடற்புழுக்கள் முக்கிய காரணமாகிறது. ரத்த சோகையை கவனிக்காமல் விட்டால் பசி குறைதல், எடை குறைதல் என சங்கிலித் தொடராக ஏற்படும் பாதிப்புகளால் மிகவும் பலவீனமான நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவார்கள். வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, நமைச்சல், படை, சொறி உள்ளிட்ட சரும நோய்களும் இந்த குடற்புழுக்களால் ஏற்படும்.
ரத்தச்சோகை சரிசெய்யப்படாதபோது, நாளடைவில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். லார்வா, நுரையீரலுக்குள் சென்று வருவதன் மூலம் சுவாசப் பிரச்னைகள், இருமல், காய்ச்சல் என நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்“ என்றார்.
இவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை யார்யார் உட்க்கொள்ளலாம்?
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மட்டுமன்றி, 45 கிலோவுக்கு மேல் உள்ள பெரியவர்களும் 400 மில்லி கிராம் குடற்புழு மாத்திரைகளை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM