கிருஷ்ணகிரி: பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பை கொண்டும், ஆயக்கட்டுப் பகுதிகளை இரண்டு மண்டலங்களாக பிரித்து முதல் மண்டலத்தில் ஐந்து நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்தில் ஐந்து நாட்களுக்கும் தண்ணீர் விட்டும் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், இரு மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஒரு நனைப்புக்கு 36.290 மி.க.அடி வீதம் எட்டு நனைப்புகளுக்கு 290.32 மில்லியன் கன அடி தண்ணீர் 15.02.2023 முதல் 09.06.2023 வரை 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
