புதுடில்லி : ‘புதுடில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த, டிச., ௪ல் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வென்றது.
இதைத் தொடர்ந்து மாநாகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.,வும் வேட்பாளரை களமிறக்கியது.
கடும் அமளி ஏற்பட்டதால், ஜன., ௬,௨௪மற்றும் பிப்., 6 ஆகியதேதிகளில் நடந்த கூட்டங்களில் மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கவில்லை.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘புதுடில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது; அரசியலமைப்பு சட்ட விதிகளில் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
புதுடில்லி துணை நிலை கவர்னர் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ”இந்த விவகாரம் தொடர்பாக வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். மேயர் தேர்தல், வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement