புதுடெல்லி: பூகம்பம் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”பூகம்பம் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளை மத்திய சுகாதாரத் துறை அளித்துள்ளது. பூகம்பம் பாதித்த 6-ம் தேதி அன்றே உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் மூன்று வாகனங்களில் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. பூகம்பம் நிகழ்ந்த 12 மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனுப்பிவைக்கப்பட்ட மருந்துப் பொருட்களின் எடை 5, 945 டன். உயிர் காக்கும் மருந்துகள் 27, பாதுகாப்புக்கான மருத்துவ உபகரணம் 2, அவசர சிகிச்சை மையத்திற்கான உபகரணங்கள் 3 ஆகியவை இதில் அடங்கும். இதன் மெத்த மதிப்பு ரூ.2 கோடி.
எங்களது முதல் வாகனம் 6-ம் தேதி மாலை 4 மணிக்குள் மூன்றாவது மற்றும் கடைசி வாகனம் இரவு 9.30 மணிக்குள்ளும் ஹிண்டன் விமான நிலையத்தை அடைந்துவிட்டது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு முதல் விமானம் மருத்துவ உதவிப் பொருட்களுடன் துருக்கிக்கு புறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 10-ம் தேதி மிகப் பெரிய அளவில் உதவிப் பொருட்களை நாங்கள் திரட்டினோம். இதில், 72 உயிர் காக்கும் மருந்துகள் உள்பட ரூ.1.4 கோடி மதிப்பிலான மருந்துகள், ரூ.4 கோடி மதிப்பிலான பிற உதவிப் பொருட்கள் ஆகியவற்றை நாங்கள் வழங்கினோம். இதில், இசிஜி இயந்திரங்கள், குளுகோமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள், வென்டிலேட்டர்கள், வீல் சேர்கள், ஆக்ஸிஜன் மாஸ்குகள், ஊசிகள், பாராசிட்டமால் மாத்திரைகள் உள்ளிட்டவை அடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.