என் தகனத்தின் போது என்னுடைய மனைவியின் அஸ்தியை என் மீது வைத்து விடுங்கள் என எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கடிதத்துக்கு உரிமையானவர் ஒரு முதியவர் என்பதையும், அவர் தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மை வெளியானது.

இந்தக் கடிதத்தை எழுதிய போலாநாத் அலோக் என்ற முதியவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கடிதம் தொடர்பாக அவரின் குடும்பத்தாரில் ஒருவரான அசோக் சிங் , “அந்தக் கடிதம் என் மாமனாரும், மூத்த இலக்கியவாதியுமான போலாநாத் அலோக் எழுதியது. போலாநாத் அலோக்கின் மனைவி பத்மா ராணி மே 25, 1990-ம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது தான் அவர்களின் உண்மையான காதல் எங்களுக்கு புரிந்தது. என் மாமியாரின் அஸ்தியை கரைக்க விடாமல் 32 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார். போலாநாத் தன் தீராத அன்பின் அடையாளமாக சிபாஹி தோலாவில் உள்ள தன்னுடைய வீட்டின் அருகே ஒரு மாமரத்தில் தன் மனைவியின் கலசத்தை கட்டி தொங்கவிட்டார்.
ஒவ்வொரு நாளும் தன் மனைவியின் கலசத்துக்கு வந்து ஒரு ரோஜாப் பூவை வைத்து, ஊதுபத்தி கொளுத்தி வணங்கி முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்துவார். இந்த நிலையில், போலாநாத் அலோக் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் இறந்த பிறகு அவரின் உடல் தகனம் செய்யப்படும் நாளில், அவரின் உயிரற்ற உடலில் தன் மனைவியின் அஸ்தியின் கலசம் வைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் ஜூன் 24, 2022 அன்று இறந்தார்.

அவரின் விருப்பத்தின்படியே கலசத்தை வைத்து அவரின் உடலை எரியூட்டினோம். என் மாமனார் இந்த உலகத்தை விட்டு விடைபெறும் போது இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்வதானால், இந்த காதல் கதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
என் மாமனார், மாமியாரின் அஸ்தியை ஒரே கலசத்தில் கலந்து, என் மாமியாரின் கலசத்தை வைத்திருந்த அதே மாமரத்தில் இப்போதும் கட்டியிருக்கிறோம். அவருடைய பாரம்பர்யத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். என் மாமனார் வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கிறார். ” எனத் தெரிவித்திருக்கிறார். போலநாத்தின் கடிதம் வைரலானதைத் தொடர்ந்து இந்த காதல் கதை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.