விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகேயுள்ள குண்டலிப்புலியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக ஜீபின் என்பவர் ‘அன்புஜோதி ஆசிரமம்’ நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு இங்கு சேர்த்துவிடப்பட்ட முதியவர் ஜபருல்லா என்பவரை பார்ப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சலீம்கான் எனும் அவரின் உறவினர் வந்திருந்தபோது, அந்த முதியவர் அங்கு இல்லாமல் போயிருக்கிறார்.

அந்த முதியவரை பெங்களுரூவில் இருக்கும் ஆசிரமம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டதாக அன்புஜோதி ஆசிரம நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த முதியவரின் உறவினர், பெங்களூரிலுள்ள ஆசிரமத்தில் பார்க்கச் சென்றபோது, அவருடன் சேர்த்து 16 பேர் அங்கு காணாமல்போய்விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்து அன்புஜோதி ஆசிரம நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, உரிய பதிலளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக கூறியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சலீம்கான், கடந்த வருடம் டிசம்பரில் கெடார் காவல் நிலையத்துக்கு புகார் அளித்திருக்கிறார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு தொடர்பாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்புஜோதி ஆசிரமத்தில் அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ், வருவாய்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில், உரிய அனுமதி பெறாமல் ஆசிரமம் இயங்கியது முதற்கட்டமாக தெரியவந்திருக்கிறது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதும், அங்குள்ளவர்களை வளர்ப்பு குரங்குகள் மூலமாக கடிக்க வைத்து சித்ரவதை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அந்த விசாரணையின்போது, ஆசிரம உரிமையாளர் ஜீபின் ஆசிரமத்தில் வளர்த்து வந்த இரண்டு குரங்குகளை திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த குரங்குகள் ஆசிரமத்திலிருந்த 10 பேர் மற்றும் ஆசிரம உரிமையாளரை கடித்திருக்கின்றன. இதனால் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் உட்பட பலரும் அலரியடித்து ஓட்டம் பிடித்தனர். குரங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த விவகாரம் பொிதான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின்படி, ஆசிரம உரிமையார் உட்பட 8 பேர்மீது சுமார் 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 4 பேர் (பிஜ் மோகன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன்) கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கொடுத்த புகாரின்படி மற்றொரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை இன்று பார்வையிட்டு நலம் விசாரித்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசாரணை நடைபெற்று வருகிறது. அன்புஜோதி ஆசிரமத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அபராதம் விதித்திருக்கிறோம். ஆசிரமத்தைமூடவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “சிகிச்சை பெற்று நிலையாக இருப்பவர்களை அருகிலுள்ள ஆசிரமங்களுக்கு மாற்றி வருகிறோம். உறவினர்கள் இருந்தால் தகவல் அளித்திருக்கிறோம். மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பிற ஆசிரமங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.