ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க-வின் 21 மாத ஆட்சியில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதாலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், காங்கிரஸ் கட்சியைவிட தி.மு.க இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்களும், அ.தி.முக-வில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஈரோட்டில் குவிந்திருக்கின்றனர்.
எங்கு நோக்கினும் இன்னோவா, ஃபார்ச்சுனர் :
தேர்தல் அறிவிப்பை அடுத்து ஈரோட்டிலுள்ள சொகுசு விடுதிகள் முதல், சாதாரணமாக லாட்ஜ்கள், வாடகை வீடுகள், திருமண மண்டபங்கள் வரை ஆளுங்கட்சியான தி.மு.க வசம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பரபரக்கப்படுகிறது. தொடக்கத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் பணிமனை அமைக்க இடமும், கட்சி ஆட்களைத் தங்கவைக்க திருமண மண்டபமும் கிடைக்காமல் புலம்பித் தவித்த சம்பவமும் அரங்கேறியது. தி.மு.க-காரர்களுக்குப் போகத்தான் மீதமிருக்கும் லாட்ஜ்களில் இருந்த அறைகள் மற்றக் கட்சிக்காரர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்த பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்தது.

ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஈரோடு மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் தி.மு.க-வின் இன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள், இரு கட்சிகளின் மாவட்டம், நகரம், ஒன்றியம், வட்டம், சதுரம் என இன்னோவா, ஃபார்ச்சுனர் உள்ளிட்ட பல வகையான சொகுசு கார்களில் குவிந்துவிட்டனர். காலை, மாலை நேரங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவதால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்குச் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிப்பது கடந்த 10 நாள்களாக வாடிக்கையாகவே மாறிவிட்டதாக ஈரோடு மக்கள் புலம்புகின்றனர்.
`வெளியூர்காரங்களா உங்களுக்கு வேற ரேட்!’
ஈரோடு நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தொடங்கி சாலையோரத்திலுள்ள உணவகங்கள் வரை வியாபாரம் சூடுபிடித்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பான தொடக்கத்தில் 15 ரூபாய்க்கு விற்ற ஆம்லெட், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க-வின் மூத்த மாவட்டச் செயலாளர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, `நான் பிரசாரத்துக்கு வந்த முதல் நாளு ஊத்தாப்பம் வாங்கி சாப்பிட்டேன்… நல்லா இருந்துச்சு சரி அடுத்த நாள் அதே ஊத்தாப்பத்தை வாங்கி வரச் சொன்னேன். ஆனா, அது இட்லி அளவுக்கு சுருங்கிவிட்டது. இனி போக போக ஊத்தாப்பத்த பனியாரமாக மாத்திருவாங்க போல’ என்று நக்கலடித்தார்.

ஒருவாரமாக லாட்ஜில் தங்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஒருவர் சலவைக் கடையில் துணி துவைக்க கேட்டதற்கு, “வெளியூர்காரங்கனா துணி தேய்க்க 15 ரூபா, துவைக்க 40 ரூபா, உள்ளூர்காரங்கனா தேய்க்க 10 ரூபா, துவைக்க 25 ரூபா” என்று தெரிவித்திருக்கின்றனர். சலூன் கடைகளில் வெளியூர்காரர்கள் என்றால், சேவிங் செய்ய 100 ரூபாய் வரை ரேட் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
மூன்று மடங்கு உயர்ந்த டாஸ்மாக் விற்பனை…
தி.மு.க-வினர் காலை பிரசாரத்துக்கு வருவோருக்கு ரூ.500, மாலை பிரசாரத்துக்கு ரூ.500 வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பெரும்பாலான ஆண்கள் வேலைக்குச் செல்வதே இல்லை. ஜவுளிக் கடைகள் அதிகமுள்ள ஈரோடு நகரில், பெரும்பாலான கடைகளுக்கு முன்பு ஆட்கள் வேலைக்குத் தேவை என்ற விளம்பரப் பதாகைகளைக் காணலாம். சிலர் காலையில் 8 மணியிலிருந்து 10 வரை பிரசாரத்துக்குச் சென்றுவிட்டு வழக்கமான வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் பிரசாரத்துக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களும் இதற்கு அனுமதி அளித்திருக்கின்றன.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவர், “இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு முன்னாடியெல்லாம் இரவில்தான் 500 ரூபா அதிகம் வரும். இப்போ 12 மணிக்கெல்லாம் 500 ரூபா கொடுத்து சரக்கு வாங்குறாங்க. சரக்கு வாங்க வரவங்க எல்லாம் 500 ரூபா நோட்டா கொடுக்கிறதால சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. அதுமட்டுமல்லாமல், கட்டிங் அடிக்கற ஆளுகெல்லாம் இப்போ பணம் விளையாடரதால குவாட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரக்கு விற்பனையும் முன்னவிட அதிகமாயிடுச்சு” என்றார்.
தேர்தல் நெருங்க நெருங்க… ஈரோடு மார்க்கெட் இன்னும் பீக்கில் செல்வது மட்டும் உறுதியாக தெரிகிறது.